search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து பகுதிகள்"

    பரங்கிமலை ரெயில் நிலைய விபத்து எதிரொலியாக விபத்து பகுதிகளில் மின்சார ரெயில்களை குறைந்த வேகத்தில் இயக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #Chennaitrainaccident
    சென்னை:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 24-ந்தேதி திருமால்பூர் பாஸ்ட் மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் சுற்றுச் சுவரில் மோதி பலியானார்கள்.

    இச்சம்பவம் மின்சார ரெயில் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மின்சார ரெயில் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தென்னக ரெயில்வே அறிவித்தது.

    விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்துக்கும், சுற்றுச்சுவருக்கும் இடைவெளி குறைவாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதற்கிடையே பயணிகள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் விபத்து பகுதிகளை கண்டறிந்த அங்கு மின்சார ரெயில்களை குறைந்த வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து வருகிறார்கள்.

    மேலும் ரெயில் தண்டவாளத்தை விதிமீறி பொதுமக்கள் கடக்கும் பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளனர். பரங்கிமலை, யானைக்கவுனி ரெயில் நிலையங்களில் விபத்து நடக்கும் பகுதிகளிலும், வில்லிவாக்கம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் விதிமீறல் நடக்கும் இடங்களிலும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரெயில்களை இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

    தண்டவாளத்தை கடக்கும் போதும், படிக்கட்டில் பயணம் செய்யும் போதும் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே பயணிகள் விதிகளை கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். #Chennaitrainaccident

    ×